சதுரங்கபட்டினத்தில் 26 ஆம் ஆண்டு மாசிமக பௌர்ணமி தீர்த்தவாரி திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் மாசிமகம் பௌர்ணமி உற்சவமாக தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். இதில், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பிரசன்ன வெங்கடேசபெருமாள் உள்பட பல்வேறு கோயில்களில் இருந்து சிறப்பு அலங்காரத்துடன் உற்சவ மூர்த்திகள் எழுந்தருள்வர். மேலும், சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். இந்நிலையில், மாசிமகத்தையொட்டி இன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த உற்சவ மூர்த்திகள் பல்வேறு அலங்காரத்துடன் கடற்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பின்னர், சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனமும் மற்றும் ஸ்ரீ அஸ்தராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, அஸ்தராஜர் கடலில் இறங்கி நீராடினார். அப்போது, கடற்கரையில் திரண்டிருந்த பக்தர்கள் கடலில் இறங்கி கோவிந்தா, கோவிந்தா என முழுக்கமிட்டு புனித நீராடினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சதுரங்கப்பட்டினம் மீனவ பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் கடலில் சீற்றம் சற்று அதிகமாக இருப்பதாகவும் அதனால் பக்தர்கள் யாரும் கடலில் இறங்கி குளிக்க வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்தனர்.