அதிக மகசூலை தந்த செங்கல்பட்டு சிறுமணி நெல்

84பார்த்தது
அதிக மகசூலை தந்த செங்கல்பட்டு சிறுமணி நெல்
"பொன்னேரி, -கருப்புகவுனி, ஆத்துார் கிச்சலி சம்பா, வாசனை சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, துாயமல்லி என, 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் உள்ளன. இவற்றை பயிரிடுவதில் தற்போது விவசாயிகளிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது.


பொன்னேரி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விவசாயி, பி. ஜி. கணபதி, பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான செங்கல்பட்டு சிறுமணி ரகத்தை முதன்முறையாக பயிரிட்டு, தற்போது அறுவடை செய்து எதிர்பார்த்த மகசூலை பெற்றுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது:

மற்ற நெல் ரகங்களை காட்டிலும், செங்கல்பட்டு சிறுமணி நெல் எந்தவொரு பூச்சி தாக்குதலும் இன்றி வளர்ந்தது. இயற்கையான மருந்தினங்களை மட்டுமே பயன்படுத்தினோம். அரை ஏக்கர் நிலத்திற்கு, 10கிலோ விதை நெல்லை, வேளாண்மைத்துறையினரிடம் பெற்று விதைத்தேன்.

சீரான வளர்ச்சியில் இருந்தபோது, 'மிக்ஜாம்' புயல் காற்றில் சிறிது பாதிப்பிற்கு உள்ளானது. மழை பாதிப்பில் இருந்து மீண்டு, 4 - 5 அடி உயரத்திற்கு வளர்ந்தது. தற்போது இதை அறுவடை செய்ததில், 15 மூட்டைகள் மகசூல் கிடைத்து உள்ளன.

மழை பாதிப்பு இல்லையென்றால் கூடுதலாகவே கிடைத்திருக்கும். எதிர்பார்த்த மகசூல் கிடைத்து உள்ளது.

இந்த நெல் ரகத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதை எளிதாகவும், நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும். பாரம்பரிய நெல் ரகங்கள் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த வருவாயை தருகின்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி