காஞ்சிபுரத்தில் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், பிப். , 1ல் நடக்கிறது. இதையொட்டி கோவிலில், ராஜகோபுரம் மற்றும் பிற கோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டு, திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், கோவில் நுழைவாயிலில், ஒவ்வொன்றும், 15, 000 கிலோ எடையில் இரண்டு யானை கற்சிலைகள் நிறுவப்பட உள்ளன.
இதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு மலைப் பகுதியிலிருந்து கற்கள் எடுத்து வரப்பட்டு உள்ளது.
சங்கராபுரத்தைச் சேர்ந்த சிற்பி பாலசுப்பிரமணியன் தலைமையிலான சிற்பிகள் அழகிய வேலைப்பாடுடன் இரு யானை கற்சிலைகளை செதுக்கி வருகின்றனர். இப்பணி முடிந்ததும் கோவில் நுழைவாயிலில் இரு யானை கற்சிலைகள் நிறுவப்படும்.
கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலில் 80 அடி அகலம், 150 அடி நீளத்தில் யாகசாலை மண்டபம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதில், கோவில் அர்ச்சகர் கே. வி. சுப்பிரமணிய சிவாச்சாரியார் தலைமையில், 66 குண்டங்களில் 166 சிவாச்சாரியார்கள் பங்கேற்று யாகசாலை பூஜை நடத்த உள்ளதாக, கோவில் திருப்பணி குழுவின் தலைவர் பெருமாள், செயலர் சுப்பராயன், செங்குந்த மகாஜன சங்க தலைவர் சிவகுரு உள்ளிட்டோர் தெரிவித்தனர். "