மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வரும் பயணியர் குறைவான கட்டணத்தில் தங்குவதற்காக, தமிழக அரசின் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், கடந்த 1976ல் கடற்கரை விடுதியை, கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அமைத்தது.
அதைத்தொடர்ந்து, குழு பயணியருக்காக, 1982ல், கடற்கரை கோவில் அருகில், இளைஞர் முகாம் விடுதியும் அமைக்கப்பட்டு, முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர். , துவக்கி வைத்தார்.
இளைஞர் முகாம் விடுதி வளாகம், கடற்கரை கோவில் அருகில், 38 ஏக்கர் பரப்புடன் உள்ளது. இவ்வளாகத்தின் 3. 5 ஏக்கரில் தங்கும் அறைகள், கருத்தரங்க கூடம், உணவகம், நீச்சல் குளம் ஆகியவற்றுடன் விடுதி இயங்கியது.
இரண்டு விடுதிகளையும், சுற்றுலா வளர்ச்சிக்கழக நிர்வாகமே நடத்தியது. கடற்கரை விடுதி லாபத்தில் இயங்கியதால், நிர்வாகமே தொடர்ந்து நிர்வகித்து வருகிறது.
இளைஞர் முகாம் விடுதி நஷ்டத்தில் இயங்கியதால், 15 ஆண்டுகள் ஒப்பந்தத்தில், தனியார் நிறுவனத்திடம், 2013ல் அளிக்கப்பட்டது.
தனியார் நிறுவனம், அதன் விருப்பத்திற்கேற்ப மேம்படுத்தி, நிறுவன பெயரில் விடுதியை நடத்தியது. ஒப்பந்த காலம், 2018 மார்ச்சில் முடிவடைந்த நிலையில், நீதிமன்ற உத்தரவில், மேலும் ஆறு மாதம் கால அவகாசம் பெற்றது.