காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற கோவில்களுக்கு சென்று வர பேட்டரி கார் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்க காஞ்சிபுரம் மாவட்ட செயலர் வழக்கறிஞர் பெர்ரி, காஞ்சிபுரம் கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விபரம்:
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன், வரதராஜ பெருமாள், ஏகாம்பரநாதர், கைலாசநாதர், வைகுண்ட பெருமாள், உலகளந்த பெருமாள் என, பல்வேறு கோவில்கள் உள்ளன.
இக்கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய வெளியூரில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இங்குள்ள கோவில்களை இணைக்கும் வகையில், நகர பேருந்து, மினி பேருந்து வசதி இல்லை.
இதனால், சுற்றுலா பயணியர் அதிக கட்டணம் கொடுத்து ஷேர் ஆட்டோ, குதிரை வண்டி, வாடகை வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
ஒரே நேரத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சுற்றுலாப் பயணியர் சென்று வரும் வகையில், வண்டலுார் உயிரியல் பூங்காவில் இயக்கப்படும் பேட்டரி கார்களை போன்று, காஞ்சிபுரத்திலும், அனைத்து கோவில்களுக்கும் சிரமமின்றி சென்று வர தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், பேட்டரி கார் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.