செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக மன்சூரியா குங்பூ தற்காப்பு கலை பயிற்சி அளித்து வருபவர் டி. பஞ்சா இவர், தற்காப்பு கலை மட்டுமின்றி வால் சுற்றுதல், கத்தி சுற்றுதல், கம்பு சுற்றுதல் போன்ற தற்காப்பு கலை பயிற்சிகளும் அளித்து வருகிறார்.
இந்நிலையில் தற்காப்பு கலை வீரர் பஞ்சா பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், சுற்றுலா வழிகாட்டிகள், சிற்பிகள் முன்னிலையில் 1000 ஓடுகள் உடைத்து உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக பரிந்துரை செய்யும் குழுவை சேர்ந்தவர்கள் சென்னை, புதுடெல்லியில் இருந்து மாமல்லபுரம் வந்திருந்தனர்.
1000 ஓடுகள் உடைப்பதற்கு முன்னதாக தற்காப்பு கலை வீரர் பஞ்சாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் பெறப்பட்டது. இச்சாதனை நடத்தும் குழுவினர் விதிமுறைகள் குறித்து அவரிடம் கையெழுத்து பெற்றனர். பிறகு மொத்தம் 2 டன் எடையுள்ள 10 ஓடுகள் அடுக்கப்பட்டு ஒரு வரிசைக்கு 100 ஓடுகள் வீதம், 10 வரிசையில் அடுக்கி வைக்கப்பட்ட 1000 ஓடுகளை 10 நிமிடத்தில் தனது கைகளில் உடைத்து சாதனை படைத்தார்.