காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், போந்துார் ஊராட்சி, ஆரநேரி கிராமத்தில் 500க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. தவிர, ஸ்ரீபெரும்புதுார், வல்லம் சிப்காட் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஏராளமான தொழிலாளர்கள், வாடகைக்கு தங்கி வேலை செய்து வருகின்றனர். ஆரநேரி பிரதான சாலை வழியே, ஸ்ரீபெரும்புதுார், மாம்பாக்கம், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அதேபோல, வல்லம், ஒரகடம் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு செல்லும் பிரதான சாலையாக இச்சாலை உள்ளது.
இந்த நிலையில், இப்பகுதியில் செயல்பட்டுவரும் இறைச்சி கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள், இந்த பிரதான சாலையோரம் உள்ள காலி இடத்தில் கொட்டுகின்றனர். இதனால், இச்சாலை வழியே நடந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்று வருபவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சாலையோரம் மூட்டை மூட்டையாக கொட்டப்படும் கோழி கழிவு மற்றும் முடிகள், காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களில் விழுகிறது. மேலும், இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால், அப்குதிவாசிகள் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சாலையோரம் இறைச்சி கழிவுகள் கொட்டும் கடைகள் மீது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.