பெண் தலைமை காவலருக்கு அரிவாள் வெட்டு

1047பார்த்தது
காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் டில்லி ராணி. இவரது கணவர் மேகநாதன். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. கணவன் - மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக அவப்பொழுது பிரிந்து வாழ்வதும் சில மாதங்கள் கழித்து சேர்ந்து வாழ்வதும் என அவர்களுடைய வாழ்க்கை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று (ஜூன் 17) டில்லி ராணி காவல் சீருடையில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவரது கணவர் மேகநாதன் வழிமறித்து வாகனத்தை காலால் எட்டி உதைத்துள்ளார். இதில் டில்லி ராணி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

தொடர்ந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து டில்லி ராணியை வெட்ட முயற்சித்துள்ளார். இதில் பயந்த டில்லி ராணி அங்கிருந்து தப்பி ஓடி எதிரே இருந்த இந்தியன் வங்கி ஏடிஎம்மில் தஞ்சமடைய முயற்சி செய்தார் அப்பொழுது, டில்லி ராணியின் இடது கையில் சரமாரியாக மேகநாதன் வெட்டியுள்ளார்.

இதை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து கத்தி கூச்சலிட்டனர். உடனே மேகநாதன் அங்கிருந்து தப்பி ஒடிவிட்டார். இந்த காட்சி அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவானது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறை சீருடையிலிருந்த பெண் காவலரை வெட்ட முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி