செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவியரிடம், இயல், இசை, நாடகம், கைவினைக் கலைகள் ஆகிய திறன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி கல்வித்துறை சார்பில், ஆண்டுதோறும் கலைத்திருவிழா நடத்தப்படுகிறது.
பள்ளி அளவிலான போட்டிகளில் முதலிடம் வென்றவர்கள் வட்டார அளவிலும், அதில் வென்றவர்கள் மாவட்ட அளவிலும், அதன் வெற்றியாளர்கள் மாநில அளவிலும் போட்டிகளில் பங்கேற்பர். திருக்கழுக்குன்றம் வட்டார பகுதியில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, ஒவ்வொரு பள்ளி அளவிலும் முதலிடம் பெற்றவர்களுக்கு, வட்டார அளவிலான போட்டிகள், கடந்த இரண்டு நாட்கள், மாமல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டன.
சுற்றுச்சூழல் அனைவரின் பொறுப்பு என்ற தலைப்பில், நேற்று முன்தினம் நடத்தப்பட்ட வில்லுப்பாட்டு போட்டியில், வட்டார பகுதி பள்ளிகளைச் சேர்ந்த 90 பேர் பங்கேற்றனர். நேற்று நடந்த நாட்டுப்புற பாடல் பாடுதல், களிமண் சிற்பம், மணல் சிற்பம் ஆகிய போட்டிகளில், 42 பேர் பங்கேற்றனர்.
வெற்றி பெறுவோர், மாவட்ட போட்டிகளில் பங்கேற்பர். இதேபோன்று, சதுரங்கப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி, திருக்கழுக்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களிலும், இப்போட்டிகள் நடத்தப்பட்டன. அடுத்து, ஒன்பது முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவியருக்கு, வட்டார அளவில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.