சேலையூர் அடுத்த வேங்கைவாசல் சித்தேரி, 20 ஏக்கர் பரப்பளவு உடையது. இதில், பல ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டது. முன்பு, இந்த ஏரியை நம்பி, சுற்றுப்புற பகுதிகளில் விவசாயம் நடந்து வந்தது.
காலப்போக்கில் விவசாய நிலங்கள் குடியிருப்புகளாக மாறியதால், நிலத்தடி நீர் மட்டத்திற்கும், கால்நடைகள் குடிப்பதற்கும் மட்டுமே பயன்பட்டது. அதன்பின் முறையாக பராமரிக்காததால், கழிவுநீர் கலக்கும் பகுதியாக மாறியது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், அப்பகுதியினர் பங்களிப்புடன், ஏரி துார்வாரி சீரமைக்கப்பட்டது. அதன்பின் பெய்த மழையால் ஏரி நிரம்பியது.
அச்சமயத்தில் வழக்கம்போல கழிவுநீரும் கலந்தது. தற்போது, சந்தோஷபுரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் ஒட்டுமொத்த கழிவு நீரும் கலந்து வருவதால், தண்ணீர் மாசடைந்து வருகிறது.
மற்றொரு புறம், ஆகாய தாமரை வளர்ந்து மூடிவிட்டது. இப்படியே போனால், கழிவு நீர் தேக்கமாக மாறி, ஏரி இருந்ததற்கான சுவடே இல்லாமல் மாயமாகும் அவலநிலை உள்ளது.
அதேபோல், போக்கு கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுதுமாக துார்வாராமல், பெயருக்காக துார்வாரி உள்ளனர்.
எனவே, பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு, வேங்கைவாசல் சித்தேரியில் கழிவு நீர் கலப்பதை தடுத்து, ஆகாய தாமரையை அகற்றி, முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.