செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், அருங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் தேன்மொழி. இவருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 11 ம் தேதி செங்கல்பட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வரால் 100 பேருக்கு பட்டா வழங்கப்பட்டு, மற்றவர்கள் அந்தந்தபகுதி வி. ஏ. ஓ. , அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்த பட்டா கேட்டு தேன்மொழி, அருங்குன்றத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் சக்குபாய். 53, என்பவரை அணுகினார்.
இதற்கு அவர்கள் 10, 000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். லஞ்சம் தர விரும்பாத தேன்மொழி, செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், அறிவுறுத்தல்படி, ரசாயனம் தடவிய லஞ்ச பணத்தை தேன்மொழி இன்று வி. ஏ. ஓ. , விடம் கொடுத்துள்ளார். அதற்கு வி. ஏ. ஓ. , உதவியாளர் சரவணன். 38 என்பவரிடம் கொடுக்க கூறியுள்ளார். பின் பணத்தை சரவணனிடம் கொடுத்துள்ளார்.
அங்கு மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, வி. ஏ. ஓ. , சக்குபாய், உதவியாளர் சரவணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், அலுவலகம் முழுவதையும் சோதனை செய்தனர். இதில், கணக்கில் வராத 70 ஆயிரம் பணத்தை கைப்பற்றி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.