காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், சுங்குவார்சத்திரம் ஆகிய பகுதிகளில், ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதுதவிர ஒரகடம், வல்லக்கோட்டை, மாத்துார் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.
இங்குள்ள வீடுகளில் இருந்து, டேங்கர் லாரிகள் வாயிலாக வெளியேற்றப்படும் கழிவுநீர், ஏரிகள், நீர்வரத்து கால்வாய் மற்றும் பிரதான சாலையோரம் கொட்டுகின்றனர்.
இதனால், சாலையோரம் மற்றும் ஏரிகளின் நீர்வரத்து கால்வாய் மாசு ஏற்படுவதோடு, துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் உள்ளது.
குறிப்பாக, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில், ஒரகடம், வல்லக்கோட்டை ஆகிய இடங்களிலும், வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் பனப்பாக்கம், பண்ருட்டி கண்டிகை பகுதிகளிலும், இரவு நேரங்களில் சாலையோரம் அதிகமாக கழிவுநீரை கொட்டுகின்றனர்.
இதைத் தடுக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் வேடிக்கை பார்ப்பதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள், சாலையோரங்களிலும், மழைநீர் கால்வாய், ஏரி உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கொட்டும் டேங்கர் லாரிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.