"பிரசவத்தின்போது பெண் மரணம்தொடரும் சம்பவங்களால் அதிர்ச்சி

59பார்த்தது
"பிரசவத்தின்போது பெண் மரணம்தொடரும் சம்பவங்களால் அதிர்ச்சி
, காஞ்சிபுரம் பல்லவன் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தன்; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி குரலரசி, 25. இவர்களுக்கு, ஏற்கனவே இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவது பிரசவத்திற்காக, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், குரலரசியை நேற்று முன்தினம் அனுமதித்தனர்.


நள்ளிரவு 2: 30 மணிக்கு குரலரசிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது, வலிப்பு ஏற்பட்டு, குரலரசி மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.

தீவிர சிகிச்சைக்காக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து, செங்கல்பட்டு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

அதிகாலை 5: 30 மணிக்கு செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

குரலரசிக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரசவத்தின்போது பெண் உயிரிழந்த சம்பவம், உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தில் கடந்த ஜூன் மாதம் பிரசவத்தின்போது, ராஜேஸ்வரி என்ற பெண் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு பெண் இறந்திருப்பது, காஞ்சிபுரம் நகரவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "

டேக்ஸ் :