ஓ. எம். ஆரில் ரூ. 30 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

58பார்த்தது
ஓ. எம். ஆரில் ரூ. 30 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
படூர் - தையூர் வரை ஒரு புறவழிச்சாலையும், திருப்போரூர் பேரூராட்சியில் அடங்கிய காலவாக்கம் - ஆலத்துார் ஊராட்சியில் அடங்கிய வெங்கலேரி இடையே ஒரு புறவழிச்சாலையும் அமைக்கும் பணிகள், தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் நடந்து வருகின்றன. அதேபோல், நெடுஞ்சாலைத்துறை, செங்கல்பட்டு உட்கோட்ட பராமரிப்பில் உள்ள ஓ. எம். ஆர். , சாலை அகலப்படுத்தும் பணிகளும் மற்றொரு புறம் நடக்கின்றன. இப்பணிக்காக, 2011ம் ஆண்டு வருவாய்த் துறை வாயிலாக நில எடுப்பு செய்யப்பட்டது. நில எடுப்பு செய்யப்பட்ட ஓ. எம். ஆர். , சாலையில், சிறுசேரி, ஏகாட்டூர், வாணியஞ்சாவடி, கழிப்பட்டூர், படூர், திருப்போரூர், ஆலத்துார் உள்ளிட்ட பகுதிகளில், 13 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. நெடுஞ்சாலைத்துறையினர் 1, 075 கோடி ரூபாய் மதிப்பிலான 24. 17 ஏக்கர் அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, படிப்படியாக மீட்டுள்ளனர். தற்போது, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இச்சாலையில், விரிவாக்கப் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இவற்றில், படூர் ரவுண்டானா அருகே, எதிர்ப்பு காரணமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் விடப்பட்டிருந்தன. இந்நிலையில், நேற்று நெடுஞ்சாலைத் துறையினர், 100க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன், மேற்கண்ட பகுதிக்கு சென்று, 10க்கும் மேற்பட்ட வீடு, வணிக கடைகளை பொக்லைன் இயந்திரம் வாயிலாக இடித்து அகற்றினர்.

தொடர்புடைய செய்தி