ரிஷிவந்தியம் அருகே பாவந்துாரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது. இங்கு, 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
இதில், சங்கராபுரம் மற்றும் தியாகதுருகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்லுாரிக்கு செல்ல, போதிய அரசு பஸ் வசதி இல்லை. இதனால் மாணவர்கள் ஆட்டோ மற்றும் தனியார் பஸ்சில் கல்லுாரிக்கு சென்றனர். இது மட்டுமின்றி சிலர் பேருந்துகளில் ஆபத்தான முறையில் தொங்கியவாறு பயணம் செய்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று முதல் தியாகதுருகம் மற்றும் சங்கராபுரத்தில் இருந்து கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
அதாவது, தியாகதுருகத்தில் இருந்து பாவந்துார் வரை காலையில் 9: 00 மணிக்கும், அடுத்த 10 நிமிடங்கள் கழித்தும் அரசு பஸ்கள் இயக்கப்படும்.
தியாகதுருகத்தில் இருந்து பாவந்துார் வழியாக சங்கராபுரத்திற்கு காலை 9: 30 மணி மற்றும் மதியம் 2: 20 மணிக்கும், சங்கராபுரம் பஸ்நிலையத்தில் இருந்து தினமும் காலை 8: 00 மணிக்கு பகண்டைகூட்ரோடு, மாடாம்பூண்டி மற்றும் பாவந்துார் வழியாக தியாகதுருகத்திற்கும், அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.