கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட முகாமில் பெறப்படும் மனுக்களை பதிவேற்றம் செய்வது குறித்து இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் கணினி இயக்குபவருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 'மக்களுடன் முதல்வர் திட்டம்' என்ற முகாமில் 15 அரசு துறைகள் சார்பில், 44 சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அளிக்கும் மனு மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையிலும், அரசின் முக்கிய சேவைகளை மக்களின் வீட்டிற்கே சென்று வழங்கும் நோக்கத்திலும் இம்முகாம் நடத்தப்படுகிறது. தற்போது மூன்றாம் கட்டமாக விளிம்பு நிலையில் உள்ள மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையொட்டி பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை உடனடியாக பதிவேற்றம் செய்வது குறித்து 15 துறைகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் மற்றும் கணினி இயக்குபவர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், மனுக்களை துறை வாரியாக பிரித்தல், பதிவேற்றம் செய்தல், மனுக்களை எந்தெந்த தலைப்பின் கீழ் பதிவேற்றம் செய்தல், மனுதாரரின் கைப்பேசி எண்களை முறையாக பதிவேற்றம் செய்தல் உட்பட பல்வேறு பணிகள் குறித்து விரிவாக பயிற்சி வழங்கப்பட்டது.