பெண்களுக்காக போராடிய தந்தை பெரியாரின் மண்ணிற்கு வந்திருப்பது மிகுந்த பெருமையாக உள்ளதாக ஈரோட்டிற்கு வருகை தந்த மிஸ் ஏசியா டைட்டில் வின்னர் ஏஞ்சல் பானுப்பிரியா பெருமிதம் தெரிவித்தார்.
ஈரோட்டில் உள்ள தந்தை பெரியாரின் நினைவகத்திற்கு, மிஸ் ஏசியா இந்தியா இன்டர்நேஷனல் 2024 அழகி போட்டியில் டைட்டில் வின்னராக வெற்றி பெற்ற கோவை மாவட்டத்தை சேர்ந்த ஏஞ்சல் பானுப்பிரியா இன்று வருகை புரிந்தார். அப்போது, நினைவகத்தில் பெரியாரின் திருவுருவ சிலைகள், அவரது செயல்பாடுகளை போற்றும் வகையில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் மற்றும் அவர் பிறந்த கட்டில்களை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏஞ்சல் பானுப்பிரியா, மிஸ் இண்டியாவாக வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் விசிக மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ள திருமாவளவன் அழைப்பு விடுத்ததாகவும், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அதில் பங்கேற்க முடியாமல் போனது வருத்தமளிப்பதாகவும் கூறினார். மேலும், பெண்களுக்காக போராடிய தந்தை பெரியாரின் மண்ணிற்கு வந்துள்ளது மிகந்து மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளதாகவும், பெரியார் நினைவகம் பல நூறாண்டுகள் நல்லமுறையில் பராமரித்து மக்கள் பயன்பாட்டில் வைக்க வேண்டும் வேண்டுகோள் விடுப்பதாகவும் கூறினார்.