கோபி: மயானத்தில் கழிவுநீர் - சாலையில் சடலத்துடன் போராட்டம்

5809பார்த்தது
கோபிசெட்டிபாளையம் அருகே ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு சொந்தமான மயானத்தில் கழிவு நீர் தேங்கி உள்ளதாக அடக்கம் செய்ய முடியாமல் இறந்தவரின் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையத்தில், நல்லகவுண்டன்பாளையம், கரட்டடிபாளையம், லக்கம்பட்டி பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என மயானம் லக்கம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட கரட்டடிபாளையத்தில் ஒதுக்கப்பட்டு பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரோடு - சத்தியமங்கலம் வரையிலான நான்கு வழி சாலை பணிகளுக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டது. அப்போது கரட்டடிபாளையம் பகுதியில் உள்ள மயானம் வழியாக செல்லும் வடிகால் அகற்றம் செய்யப்பட்டது. இதனால் லக்கம்பட்டி பேரூராட்சி பகுதிகளில் உள்ள கழிவு நீரானது மயானம் வழியாக செல்வதால் மயானத்தில் கழிவு நீர் தேங்கி உடல்களை அடக்கம் செய்யப்படாத நிலையில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று நல்லகவுண்டம் பாளையம் பகுதியை சேர்ந்த சவுகத் அலி (60) என்பவர் உயிரிழந்த நிலையில் அவரது உடல் நல்லடக்கம் செய்ய நல்லகவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மயானத்துக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்ய தோண்டப்பட்ட குழுவில் கழிவுநீர் தேங்கி நின்றதால் உடலை அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் பொதுமக்கள் அவரது உடலை அடக்கம் செய்யாமல் ஈரோடு - சத்தியமங்கலம் சாலையில் உடலை வைத்து, மயானத்தில் கழிவுநீர் தேங்காதவாறு சாக்கடை வசதி செய்து தரக் கோரியும், மயானத்தின் பாதுகாப்பிற்காக தடுப்பு சுவர் அமைப்பு தர கோரியும் இறந்தவரின் உடலை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோபி காவல் ஆய்வாளர் காமராஜ், காவல்துறை துணை கண்காணிப்பாளர் தங்கவேல்,வட்டாசியர்,நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆகியோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் அதிகாரிகளுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கும் சமாதானம் ஏற்படாத நிலையில் சாலையில் டென்ட் அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக ஈரோடு - சத்தியமங்கலம் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி