ஈரோடு அரசு மருத்துவ மனையில் தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு அரசு மருத்துவ மனையில் காவலாளி, தூய்மைபணிகள், சமைப்பது, எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பணிகளுக்கு தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதில் பணிகளை முறையாக செய்யாததாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒப்பந்த பணியாளர்கள் சண்முகம், வேலுசாமி, பிரகாஷ், பூங்கொடி ஆகிய 4பேர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக உரிய விளக்கம் அளிப்பதற்காக இவர்கள் 4பேரும் முன்தினம் அரசு மருத்துவமனையில் உள்ள உண்டு உறைவிட டாக்டர் சசிரேகாவின் அறைக்கு சென்றனர். அங்கு அவரை சந்திக்க முடியாததால், அவர்கள் 4 பேருமே அறைக்கு வெளியே திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலையிலும் விடிய, விடிய இவர்களது போராட்டம் தொடர்ந்தது. காலையில் வேலுசாமி என்பவர் திடீரென மயக்கம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து தற்காலிக பணியாளர்கள் கூறுகையில், எங்களுக்காக ஒதுக்கப்பட்ட பணிகளை தவிர பிற பணிகளை செய்ய மறுத்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். இதற்கான உரிய விசாரணையும் நடத்தப்படுவதில்லை. எங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டோம், என்றனர்.