ஈரோட்டில் தனியார் லாட்ஜில்
தோட்டாக்களுடன் துப்பாக்கி பறிமுதல்: போலீசார் விசாரணை
ஈரோட்டில் தனியார் லாட்ஜில் வடமாநில நபர் தங்கி இருந்த அறையில் தோட்டாக்களுடன் துப்பாக்கியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு சத்தி சாலையில் தனியார் லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. அந்த ஓட்டலில் நேற்று மாலை வட மாநில நபர் தங்கியிருந்த அறையை, லாட்ஜ் ஊழியர் சுத்தம் செய்ய உள்ளே சென்றனர். அப்போது படுக்கையில் தலையணைக்கு அடியில் துப்பாக்கியும், தோட்டக்களும் இருந்தது. இதைப்பார்த்த லாட்ஜ் ஊழியர்அதிர்ச்சி அடைந்து நிர்வாகத்தினரிடம் தகவல் தெரிவித்தார். இதையறிந்த ஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அங்கிருந்த துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில், அந்த துப்பாக்கி வடமாநிலங்களில் பயன்படுத்தப்படும் நாட்டு கைத்துப்பாக்கி என்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த அறையில் தங்கியிருந்த நபர் குறித்து லாட்ஜ் நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கியூ பிரிவு போலீசார் லாட்ஜ்ஜிற்கு வந்து நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் நக்சல் அல்லது மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவரா? அல்லது ரவுடி கும்பலை சேர்ந்தவரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். லாட்ஜில் துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.