ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -
மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள், ராணுவ ஓய்வூதியதாரர்கள், இதர குடும்ப ஓய்வூதியதாரர்கள் வருகிற நவம்பர் 1ஆம் தேதி முதல் தங்களது உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேரில் சென்று உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போட்ஸ்ட் பேமன்ட் வங்கி ஓய்வூதியதாரர்களின் வீட்டு வாசலிலேயே பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கு சேவை கட்டணமாக ரூ. 70 மட்டுமே தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் , செல்போன் எண் பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால் ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க முடியும். நவம்பர் 1ஆம் தேதி முதல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்களில் அந்தந்த பகுதி தபால்காரர் மூலமாக ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க முகாம் நடத்தப்பட உள்ளது.