ஈரோட்டில் பரபரப்பு
வீட்டின் கழிப்பறையில் பதுங்கி இருந்த 6 அடி நாகப்பாம்பால் பரபரப்பு
ஈரோடு நசியனூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இவரின் வீட்டின் கழிப்பறையில் இருந்து வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. இதனால் அவரது மனைவி கழிப்பறையை சென்று பார்த்த போது பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் அங்கிருந்து வெளியே ஓடிவந்து கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினரும் ஓடி வந்து பார்த்தபோது அது நாகப்பாம்பு என தெரிய வந்தது.
உடனடியாக இது குறித்து பாம்பு பிடி வீரர் யுவராஜாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவத்திற்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி பாம்பை மீட்டார். அது 6 அடி நீளம் உள்ள கோதுமை நாகப்பாம்பு என தெரிய வந்தது. பின்னர் அந்தப் பாம்பு அடர்ந்த வனப் பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.