தாளவாடியை அடுத்த தலமலை ஊராட்சிக்குட்பட்ட மலைக்கிராமம் தொட்டபுரம். இந்த கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தில் ராகி தானியங்களை இந்த கிராமத்தில் சேமித்துவைக்க சாலையோரம் 3 இடங்களில் குழிகள் அமைக்கப்பட்டன. தற்போது அந்த குழிகள் மண்ணால் மூடப்பட்டன. எனினும் அந்த குழிகள் முறையாக மூடப்படவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த குழியில் லாரி சிக்கி கவிழ்ந்ததில் அந்த பகுதியை சேர்ந்த மூதாட்டி பலியானார். தற்போது மழை பெய்து வருவதால் அந்த குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஆபத்தை உணராமல் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலையில் வருகிறார்கள். எனவே அசம்பாவித சம்பவம் ஏற்பட்டு உயிர்ச்சேதம் ஏற்படும் முன் ஆபத்தான குழிகளை மூட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.