நான்கு வழிச்சாலை விரிவாக்க பணியில் கன்னிவாடி கண்டுகொள்ளப்படாத நிலையில் இரு வாகனங்கள் எதிரெதிரே கடந்து செல்ல முடியாத அவலம் நீடிக்கிறது. ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
செம்பட்டி- பழநி ரோட்டின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கன்னிவாடி பேரூராட்சி உள்ளது. மலைக்கிராமமான தோணிமலையை தனி வார்டாக கொண்டு 15 வார்டுகளில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மதுரை, தேனி, திருப்பூர், கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கென தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் இவ்வழியே செல்கின்றன. சுற்றிய 30க்கு மேற்பட்ட கிராமத்தினர் வெளியூர்களுக்குச் செல்ல கன்னிவாடி வரவேண்டி உள்ளது. இருப்பினும் பயணிகள் காத்திருப்பதற்கென போதிய இட வசதி இல்லை.
சில மாதங்களுக்கு முன் துவங்கிய நான்கு வழிச்சாலை விரிவாக்கத்திலும் பெயரளவில் மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கோட்டை கருப்பண்ணசுவாமி கோயில் முதல் போலீஸ் ஸ்டேஷன் வரையான பகுதிகள் விரிவுபடுத்தப்படவில்லை. மெயின் ரோடு மட்டுமின்றி ரெட்டியார்சத்திரம் ரோட்டிலும் இருபுறமும் தனியார் ஆக்கிரமிப்பு கடைகள், கூடுதல் விளம்பர பதாகைகள் அமைத்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவாக்கத்தை முழுமைப்படுத்தினால் மட்டுமே நெரிசல் விபத்துக்களை தவிர்க்க முடியும் என்றனர்.