வத்தலகுண்டு: குறைந்த அழுத்த மின்சாரத்தால் விவசாயிகள் அவதி

81பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே ஜி. தும்மலப்பட்டி கிராமத்தில் மஞ்சள் ஆற்று தடுப்பணை பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் தென்னை, வாழை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்பகுதி விவசாய கிணறுகளில் செயல்படும் 20க்கும் மேற்பட்ட மின்மோட்டார்கள் பயன்பாட்டிற்கு குறைந்த அழுத்த மின்சாரம் கிடைப்பதால் விவசாயிகள் கடும் அவதி அடைந்து வந்தனர். பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஊராட்சி ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் எடுக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டு வந்தது. 

இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் உயர் அழுத்த மின்மாற்றி அமைக்கப்பட்டது. மின் கம்பங்கள் உண்டுபட்டு மின்மாற்றி உள்ளிட்ட அனைத்து சாதனங்களும் பொருத்தப்பட்ட நிலையில் திடீரென ஏற்பட்ட தடங்கல் காரணமாக மின்மாற்றிக்கு மின் இணைப்பு வழங்காமல் மின்வாரியத் துறையினர் அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று நினைத்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் மின்வாரியத் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. தற்போது வெறும் மின்கம்பம் மட்டுமே காட்சி பொருளாக இருக்கும் நிலையில் தங்கள் பகுதி மின்சார பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி