திண்டுக்கல்: திமுகவில் இணைந்த பாமக நிர்வாகி

2587பார்த்தது
திண்டுக்கல்: திமுகவில் இணைந்த பாமக நிர்வாகி
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் ம. திலகபாமா போட்டியிடுகிறார். அண்மையில் ஒட்டன் சத்திரத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில், 2019 மக்களவைத் தேர்தலில்
இத்தொகுதியில் போட்டியிட்ட பாமக மாவட்டச் செயலாளர் ஜோதி முத்து-வுக்கும், தற்போதைய வேட்பாளர் திலகபாமாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஜோதி முத்துவின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.

தனது பதவி பறிக்கப்பட்டதற்கு வேட்பாளர் திலகபாமாதான் காரணம் என கருதிய ஜோதி முத்து, அதன் பின்பு பிரச்சா ரத்துக்கு செல்வதை தவிர்த்தார். இந்நிலையில், தேனியில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஜோதிமுத்து திமுகவில் இணைந்தார். இவருடன் முன்னாள் மாநில துணைத் தலைவர் சீனி வாசன், மாவட்ட அமைப்பு தலைவர் லைக் அலிமீரான் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.

இதுகுறித்து ஜோதி முத்து கூறுகையில், கட்சியில் உழைப்பவர்களுக்கு மதிப்பில்லை. மாவட்டத்துக்குள் இருப்பவர்களை கட்சித் தலைமை உதாசீனப்படுத்திவிட்டு, வேட்பாளராக வந்தவரின் பேச்சைக் கேட்டு என்னை பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டனர்.

அதை புரிந்து கொள்ளாமல் தவறான முடிவை கட்சித் தலைமை எடுத்தது. பாமக நிர்வாகிகள் சிலரை வேட்பாளர் கண்டுகொள்ளாததால், அந்த நிர்வாகிகள் தனியாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி