திண்டுக்கல் மாவட்டத்திற்கு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவையை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கொடி அசைத்து துவக்கி வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் திட்டத்தில் நட மாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவையினை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட கால்நடை மருத்துவ ஊர்தியை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். அதன் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்திற்கு 7 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் வழங்கப்பட்டு, அதனை பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. இதன் வாயிலாக, கால்நடை மருந்தகங்களுக்கு தொலைவில் உள்ள கிராமங்களில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு, உரிய நேரத்தில் மருத்துவ ஊர்தியை கொண்டு சென்று, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தியில், கால்நடைகளுக்கு, குடற்புழு நீக்கம் செய்தல், தடுப்பூசி போடுதல், சினை பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் கால்நடைகளுக்கு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.