திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்கம், இலக்கிய களம் ஆகியவை சார்பில் 11-வது புத்தக திருவிழா, திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த 10-ந் தேதி தொடங்கியது.
திருவிழாவின் நிறைவு நாளான இன்று உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற காரணமாக இருந்த தலைமை ஆசிரியர்கள், திறனறி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் உள்பட பலருக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஓய்வு பெற்ற போலீஸ் ஐ. ஜி. முத்துசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: -
தமிழகத்தில் புத்தகத்திருவிழா சிறப்பாக நடைபெறுவது திண்டுக்கல்லில் மட்டும் தான்.
எனது வாழ்க்கையில் 3 புத்தகங்கள் மிகவும் முக்கிய இடம் பிடித்துள்ளன. ‘எண்ணம் போல் வாழ்வு, புலால் உண்பது எவ்வளவு தீமை, நேர்மை படுத்தும் பாடு’ என்ற தலைப்புகளை கொண்ட புத்தகங்கள் தான் எனது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. ஒவ்வொரு புத்தகமும் 100 நண்பர்களுக்கு சமம். இதனை மாணவர்கள் உணர்ந்துகொண்டால் அவர்கள் வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
இவ்வாறு அவர் பேசினார். அதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் அருண்மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.