திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே, அய்யம்பாளையத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மருதாநதி கரையோரம் அமைந்துள்ள, பாண்டிய மன்னர் காலத்தைச் சேர்ந்த, 1200 ஆண்டு பழமை வாய்ந்த, ஸ்ரீராஜராஜ சோழீஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை, விசேஷ சந்தி யாக சாலை பூஜைகள் நடைபெற்றது.
நேற்று யாக சாலையிலிருந்து கடகம் புறப்பாடு செய்து, புண்ணிய கலசங்கள் ஆலயம் வளம் வருதல் நிகழ்ச்சி மற்றும் திருக்கோவிலில் அனைத்து மூலஸ்தான மூர்த்திகள் பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனையடுத்து காலை கோபுர விமான கலசங்களுக்கு திருக்குடமுழுக்கு விழா நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெற்றது. விழாவில், அய்யம்பாளையம் மற்றும் அதன் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. குடமுழுக்கு விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.