சின்னாளபட்டி பேரூராட்சி, காந்திகிராம ஊராட்சி நிர்வாகங்களில் திடக்கழிவு மேலாண்மையில் நீடிக்கும் அலட்சியத்தால் நான்கு வழிச்சாலை பகுதியில் அடிக்கடி புகைமண்டலம் பரவி இப்பகுதியில் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
சின்னாளபட்டி பேரூராட்சியின் 18 வது வார்டுக்கு உட்பட்ட திருநகர் காலனி திண்டுக்கல் மதுரை தேசிய நான்குவழிச் சாலை பகுதியில் அமைந்துள்ளது. இதையடுத்துள்ள சவுந்தரம் நகர் காந்திகிராமம் ஊராட்சி பகுதியில் எல்லையாக அமைந்துள்ளது. நான்கு வழிச்சாலையில் இருந்து சின்னாளபட்டிக்கு வரும் சர்வீஸ் ரோட்டில் மழை நீர் செல்லும் நீர்வரத்து வாய்க்காலில் அரை கிலோ மீட்டர் துாரத்திற்கு சாலையின் இரு புறமும் பாலிதீன் மருத்துவ குப்பை கழிவுகள் குவிக்கப்பட்டு வருகிறது.
சின்னாளபட்டி சிறப்பு நிலை பேரூராட்சி , காந்திகிராம் ஊராட்சி நிர்வாகங்களில் திடக்கழிவு மேலாண்மை செயல்பாட்டில் உள்ள அலட்சியத்தால் இப்பிரச்னைக்கு பல மாதங்களாக தீர்வு காணப்படாமல் உள்ளது. இரவு, அதிகாலை நேரங்களில் குப்பை கழிவுகளில் சிலர் தீ வைத்து எரியூட்டுகின்றனர். சின்னாளபட்டி பேரூராட்சி நிர்வாகமும் இப்பிரச்னையை கண்டு கொள்வதில்லை. மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து வரத்து வாய்க்காலில் கழிவுகளை நிரந்தரமாக அகற்ற வேண்டியது அவசியம்.