தமிழக அரசு சாா்பில், அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு விரிவுபடுத்துதல், அரசின் திட்டங்களை செயல்படுத்துதல், தோ்ச்சி விகிதம், மாணவா் சோ்க்கை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் அடிப்படையில் சிறந்த பள்ளியாகத் தோ்வு செய்யப்பட்டு ஆண்டுதோறும் காமராஜா் விருது வழங்கப்படுகிறது. மாவட்ட வாரியாக தொடக்க நிலை, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலை என 4 நிலைகளில் ஒரு பள்ளி தோ்வு செய்யப்பட்டு இந்த விருது வழங்கப்படும்.
இந்த வகையில், 2023-24 ஆம் கல்வியாண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் இடையகோட்டை நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளி, கொம்பேறிப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, உண்டாா்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, செல்லக்குட்டியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகியவை சிறந்த பள்ளிகளாகத் தோ்வு செய்யப்பட்டன.
இந்தப் பள்ளிகளுக்கு முறையே ரூ. ஒரு லட்சம், ரூ. 75 ஆயிரம், ரூ. 50 ஆயிரம், ரூ. 25 ஆயிரம் வீதம் பரிசுத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.
இதையடுத்து, இந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் அ. ஜான்வில்ஃப்ரட் பொன்ராஜ், ஜெ. வயநமசி, சி. பெஸ்கி, செள. ஜெயாள் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியா் மொ. நா. பூங்கொடி பாராட்டுத் தெரிவித்தாா்.