தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரப்ப நாயக்கன் பட்டி பஞ்சாயத்துகுட்பட்ட பாப்பநாயக்கன் வலசையில் 180க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த 25 மேற்பட்ட மாணவ மாணவிகள் தீர்த்தமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். மாணவ மாணவிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் 10 கிலோமீட்டர் தூரம் பள்ளிக்கு நடந்து சென்று வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து பள்ளி மாணவ/ மாணவிகள் கூறும் பொழுது பள்ளிக்கு நடந்துச் சென்று வருவதால் வீட்டிற்கு வந்தவுடன் சோர்வு ஏற்படுகிறது. வீட்டு பாடங்களைப் படிக்க முடிவதில்லை. மேலும் மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் யாரேனும் வந்தால் அவர்கள் உதவியுடன் செல்கின்றனர். ஆனால் மாணவிகள் நடந்தே தான் செல்கின்றோம்.
பலமுறை பேருந்து இயக்க மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவிதமான பலனும் இல்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் அரசுப் பேருந்து வசதி செய்து தந்தால் நலமாக இருக்கும். மேலும் பள்ளிக்குச் செல்லும் வழியில் வரட்டாறு செல்வதால் மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது மூன்று கிலோமீட்டர் தூரம் கூடுதலாக நடந்து செல்ல வேண்டி உள்ளது எனப் பள்ளி மாணவ மாணவிகள் தெரிவித்துள்ளனர்.