கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை அருகே உளுந்தாம்பட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் தொன்மை பாதுகாப்பு பற்றியும், பழமையான காசுகள், பானை ஓடுகளை அடையாளம் காணவும் பயிற்சி அளித்து வருகிறார். இந்நிலையில் கடலூர் அரசு தொழிற்பயிற்சி பள்ளி மாணவர் பிரதாப், திருத்துறையூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் டேவிட் ராஜ்குமார், வேல்முருகன், உளுந்தாம்பட்டு அரசுப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் முகேஷ்பாபு, தமிழரசன் ஆகியோர் உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றங்கரையில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேலுவுடன் களஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு பழங்கால 3 செப்பு நாணயங்களை அவர்கள் கண்டெடுத்தனர். இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறுகையில், வரலாறு, பண்பாடு பற்றிய ஆய்வில் நாணயங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. மன்னர்கள் தங்களின் போர்வெற்றியை கொண்டாட சிறப்பு நாணயங்களை வெளியிட்டு வந்துள்ளார்கள். அரசுப்பள்ளி மாணவர்கள் கண்டெடுத்த 3 நாணயங்களில் இரண்டு ராஜராஜன் பெயர் பொறித்த சோழர் கால நாணயம். மற்றொன்று விஜயநகர கால நாணயம் ஆகும். 2 சோழர் நாணயங்களின் ஒருபக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க, அவரது இடப்பக்கம் 4 வட்டங்கள் உள்ளன. அவற்றின் மேலே பிறையும், கீழே மலரும் உள்ளன. வலது பக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது.