கோவை போத்தனூர் கோணவாய்க்கால்பாளையத்தை சேர்ந்தவர் கவுதம். இவரது மனைவி சந்திரகலா (38). இவர், நேற்று குடும்பத்தினருடன் ஆர். எஸ். புரம் சென்றார். பின்னர் அங்கிருந்து வீடு திரும்புவதற்காக சந்திரகலா கால்டாக்சி புக் செய்தார். கால் டாக்சி வந்ததும் அதில் அனைவரும் ஏறிக்கொண்டிருந்தனர். அப்போது சந்திரகலா தாயார் ஏறுவதற்குள் டிரைவர் குமார் காரை இயக்கியதாக தெரிகிறது.
அப்போது அவரது தாயார் காரில் ஏற முடியாமல் தடுமாறினார். இதனைப்பார்த்த சந்திரகலா டிரைவரை கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கால் டாக்சி டிரைவர், சந்திரகலாவின் பெற்றோரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சந்திரகலா ஆர். எஸ். புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவை சரவணம்பட்டியை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் குமார் (63) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.