கோவையில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் யானைகள் தொடர்ந்து புகுந்து வருவதால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது, கோவை தொண்டாமுத்தூர் அருகே விராலியூர் பகுதியில் ஒற்றைக்கொம்பு யானை நேற்று (ஜனவரி 25) இரவு புகுந்துள்ளது.
இன்று (ஜனவரி 26) காலை யானை வனப்பகுதியை நோக்கி சென்றபோது, அதை கண்ட ஒரு முதியவர் அதிர்ச்சியில் ஓடிய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தொண்டாமுத்தூர், சாடிவயல், மருதமலை, தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் யானை கூட்டம், உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமங்களில் புகுந்து பயிர் சேதம் ஏற்படுத்தி வருகிறது.
வனத்துறையினர், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், யானை-மனித மோதல் தொடர்ந்து நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.