

கோவை: உரிய ஆவணங்களின்றி இயக்கிய வாகனங்கள் பறிமுதல்!
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனின் உத்தரவின் பேரில், குற்றச் செயல்களைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, டி. எஸ். பி சிவக்குமார் தலைமையில் 75 காவலர்கள் நேற்று அறிவொளி நகர் பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த திடீர் சோதனையின்போது, உரிய ஆவணங்கள் இன்றி இயங்கி வந்த 4 ஆட்டோக்களும், 47 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தங்களது வாகனங்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். ஆவணங்கள் இல்லாத பட்சத்தில், சம்பந்தப்பட்ட வாகனங்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரித்தனர். மேலும், குடியிருப்புப் பகுதிகளில் இதுபோன்ற ஒரு திடீர் சோதனை நடத்தப்படுவது இதுவே முதல் முறை என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர். இந்த அதிரடி நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.