கோவை: விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

62பார்த்தது
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுமார் 1. 5 லட்சம் விசைத்தறிகள் இயங்காத நிலையில், நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தத் தொழிலை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், நாளொன்றுக்கு சுமார் ரூ. 35 கோடிக்கு மேல் வர்த்தக இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் சோமனூரில் நேற்று நடைபெற்ற கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் வேலை நிறுத்த போராட்டம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. சங்கத் தலைவர் பூபதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியோருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், மின் கட்டண உயர்வுக்கு தீர்வு காண வேண்டும், கூலி உயர்வுக்கு சட்டப் பாதுகாப்புடன் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தியே நேற்று காலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்வதாக சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி