சூலூர்: சட்டவிரோத மது விற்பனை - போலீசார் திடீர் சோதனை!

64பார்த்தது
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புறநகர் பகுதிகளில், தமிழக அரசின் மதுபானம் சட்டவிரோதமாக விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, சிறப்பு பிரிவு போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அன்னூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தாபா ஹோட்டல்களிலும், சூலூரில் உள்ள கௌபாய் ரெஸ்டாரன்ட், டால்ஃபின் ரெஸ்டாரன்ட், வடுகை, லவ்லி, ப்ளூ லைன் உள்ளிட்ட பிரபல ரெஸ்டாரன்ட்களிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, சட்டவிரோத மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்வதுடன், தென் மாவட்டங்களில் இருந்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகள், தேடப்படும் குற்றவாளிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் யாரேனும் தாபா ஹோட்டல்களில் பணிபுரிகிறார்களா என்பது குறித்தும் போலீசார் ஆய்வு நடத்தினர்.
அரசின் விதிமுறைகளை மீறி மதுபானம் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சட்டவிரோத மது விற்பனையை தடுப்பதற்கும், குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் தலைமறைவாக இருக்கிறார்களா என்பதைக் கண்டறிவதற்கும் இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி