கோவை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் 65 சதவீத விவசாயிகள் தென்னை விவசாயத்தை நம்பியும் அதனை சார்ந்த தொழில்களை நம்பியும் விவசாயம் செய்து வருகிறார்கள். இதனால் தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்யும் விவசாயிகள் 65 சதவீதத்திற்கும் மேலாக உள்ளனர். தேங்காய் எண்ணெயை தமிழக அரசால் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என கால் நூற்றாண்டு காலமாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை எந்த அரசும் செயல்படுத்தவில்லை என விவசாயிகள் கூறிவருகின்றனர். இந்நிலையில், கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் 100 நாட்கள் 100 ரேஷன் கடை முன்பாக போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுதி இப்போராட்டம் அருகம்பாளையம் பகுதியில் இன்று நடைபெற்றது.