கணியூர், மோப்பிரிபாளையம் கிராமங்களில் பூச்சியால் பாதிக்கப்பட்ட தென்னைகளை விஞ்ஞானிகள் நேற்று (செப்.17) ஆய்வு செய்தனர். கணியூர் மற்றும் மோப்பிரிபாளையம் கிராமங்களில் நோய் தாக்குதலால் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, ஆழியார் நகர் பூச்சியியல் துறை விஞ்ஞானி அருள் பிரகாசம் தலைமையிலான குழுவினர் அப்பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
கருந்தலைப்புழு, காண்டாமிருக வண்டு, வெள்ளை ஈக்கள் மற்றும் சிவப்பு கூன் வண்டு ஆகியவற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என, ஆய்வு செய்தனர். மேற்கண்ட பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளிடம் அதிகாரிகள் கூறியதாவது; வெப்பநிலை அதிகம் உள்ள காலத்தில் கருந்தலை புழு பாதிப்பு அதிகம் இருக்கும். மரத்தின் அடிப்பகுதியில் உள்ள ஓலைகளில் உள்ள பச்சயத்தை புழுக்கள் உண்ணும். ஓலைகள் தீயினால் காய்ந்தது போல் ஆகிவிடும். கூட்டுப்புழு பருவம் முடிந்து முதிர்ந்த பட்டாம்பூச்சியாக மாறி, மீண்டும் முட்டையிடும். இவற்றை கட்டுப்படுத்த இயற்கையான பிராக்கானிட் வகை ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு, 21 பாக்கெட் வீதம் விட வேண்டும். ஆழியார் நகர் தென்னை ஆராய்ச்சி மையத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. முதிர்ந்த பட்டாம்பூச்சிகளை கவர, இரவில் விளக்கு பொறிகளை வைக்க வேண்டும். பாதிப்பு அதிகம் இருந்தால் மட்டும் ரசாயன முறையில் பூச்சிக்கொல்லி மருந்துகளை ஓலைகளில் தெளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.