கோவை மாநகரில் போதை பொருள் விற்பனையை தடுத்து பள்ளி மாணவர்களை பாதுகாக்கும் வகையில் மாவட்ட காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் காவல்துறையினர் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார். செல்வபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஹவுசிங் யூனிட் பகுதியில் 6 பிளாக்குகளில் 528 வீடுகள், புதிய பிளாக்கில் 112 வீடுகள், பழைய பிளாக்கில் 373 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனைக்காக வைத்திருந்த ஷேக் இப்ராஹிம் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.