பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கிபாளையம் பகுதியில் 7. 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கு பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இந்தியாவின் போதையின் தலைநகராக தமிழகம் விளங்குகிறது. தமிழகம் போதையில் தத்தளித்து கொண்டிருக்கிறது என்று ஜெயராமன் குற்றம்சாட்டினார்.
அண்மையில் பொள்ளாச்சி பகுதியில் நடந்த சில சம்பவங்களை சுட்டிக்காட்டிய அவர், மாவடப்பு பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையும், ஆனைமலை அருகே செம்மனாபதி பகுதியில் 3000 லிட்டருக்கும் மேலான எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டதையும் குறிப்பிட்டார்.
பொள்ளாச்சியின் பல பகுதிகளில் கள்ளச்சாராயமும் போதை பொருட்களும் தாராளமாக கிடைப்பதாக கூறிய ஜெயராமன், இதனை தடுக்க காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், இலங்கைக்கு கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் தமிழகத்திலிருந்து கடல் வழியாக கடத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.