பொள்ளாச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு, திட்டத்தின் முன்னோடிகளின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டம் உருவான நாளான அக்டோபர் 7ம் தேதியை தமிழக அரசு பாசன திட்ட தினமாக அறிவித்திருந்தது. இதனை முன்னிட்டு, பொள்ளாச்சி பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில், திட்டம் உருவாக காரணமாக இருந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி. கே. பழனிச்சாமி கவுண்டர், முன்னாள் மத்திய நிதியமைச்சர் சி. சுப்பிரமணியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான பொள்ளாச்சி மகாலிங்கம், முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் கே. எஸ். ராவ் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு அமைச்சர் சாமிநாதன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.