ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் வைபவம் நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக, பல்வேறு கிராம மக்கள் பால்குடம் எடுத்தும், வேல் குத்தியும் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
குண்டம் பூ வளர்க்கும் நிகழ்வில், பக்தர்கள் அதிக அளவில் விறகுகளை காணிக்கையாக அளித்தனர். இரவு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். குண்டம் இறங்கும் வைபவத்தை காண பக்தர்கள் இரவு முழுவதும் கோவில் வளாகத்திலேயே தங்கி இருந்தனர். அதிகாலையில், திருவாபரண பெட்டி மற்றும் சூலாயுதத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி துவங்கியது. முதலில் பூசாரி குண்டத்தில் இறங்கினார். அவரைத் தொடர்ந்து, விரதம் இருந்த பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவிழாவையொட்டி, கோவில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. எங்கு திரும்பினாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குண்டம் திருவிழா வெற்றிகரமாக நடைபெற, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறையினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.