கோவை மாவட்டம், ஆலாந்துறை அடுத்த காருண்யா பல்கலைக் கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பல்வேறு துறைகளில் பயின்று வருகின்றனர். பல்கலைக் கழகத்தின் பின்புறம் உள்ள வேளாண் தோட்டத்தில், வேளாண்துறை மாணவர்கள் பல்வேறு பயிர்களை பயிரிட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு ஒற்றைக் காட்டு யானை ஒன்று வேளாண் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, யானை அங்கிருந்து வனப்பகுதியை நோக்கி ஓடியது. இந்த காட்சியை அங்கிருந்த மாணவர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.