கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை ஊராட்சிக்கு உட்பட்ட கடமான்கோம்பை கிராமத்தில் வசிக்கும் மணி (45) என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், நீராடி முதல் கடமான்கோம்பை வரை முறையான சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் செல்ல முடியவில்லை. இதனால், கிராம மக்கள் வேறு வழியின்றி மணியின் உடலை டோலி கட்டி சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.
வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இக்கிராமத்தில் சாலை வசதி இல்லாததால், பல ஆண்டுகளாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அவசர காலங்களில் மருத்துவ உதவி கிடைப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. இது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலை வசதி இல்லாததால் மக்கள் படும் இன்னல்களை உணர்த்தும் வகையில் இந்த சம்பவம் அமைந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கடமான்கோம்பை கிராமத்திற்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என நேற்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.