கோவை வடவள்ளி அருகே உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் பக்தர்களால் பெருமானின் ஏழாம் படை வீடாக போற்றப்படுகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி யாக சாலை பூஜை, சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி இந்திர விமான வாகனத்தில் திருவீதி உலா வந்தார். தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று மருதமலை முருகன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கோவில் முன் மண்டபத்தில் சுப்பிரமணியசாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. சுப்பிரமணிய சுவாமி நீலப் பட்டு உடுத்தியும், வள்ளி மஞ்சள் பட்டும், தெய்வானை பச்சை பட்டு உடுத்தியும் மணக்கோலத்தில் காட்சியளித்தனர்.
தேவாரம் பாடல்களை பாடி ஓதுவார்கள் திருக்கல்யாண நிகழ்ச்சியை நடத்தினர்.