கோவைப்புதுார், ஆறுமுககவுண்டன் வீதியை சேர்ந்தவர் சபரி(30). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். ஆன்லைன் வாயிலாக வேலை தேடி வந்துள்ளார். இவரது மொபைல் போனுக்கு டெலிகிராம் வாயிலாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. சபரி விருப்பம் தெரிவித்த நிலையில், சபரியை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். அதில் தினசரி கொடுக்கப்படும் சிறு சிறு டாஸ்க் செய்தால், பணம் கொடுக்கப்படும் என, மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். இதையடுத்துமுதலில் ரூ. 10 ஆயிரத்தை மோசடி கும்பல் அளித்த வங்கி கணக்கிற்கு சபரி அனுப்பினார்.
அவர்கள் கொடுத்த டாஸ்க்'ஐ ஆன்லைனில் செய்து முடித்தார். டாஸ்க் முடித்ததற்காக 2000 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. பணம் கிடைத்ததால் சபரி அந்த வேலையை நம்பியுள்ளர். பின்னர் ஆக-6ம் தேதி முதல் 13ம் தேதி வரை பல்வேறு தவணைகளில் ரூ. 14 லட்சத்து 53 ஆயிரம் பணத்தை, மோசடி கும்பல் அளித்த பல்வேறு கணக்குகளுக்கு அனுப்பினார். இதன் பின் மோசடி கும்பல் சபரியை தொடர்பு கொள்வதை நிறுத்தினர். சந்தேகமடைந்த சபரி, மோசடி கும்பலை தொடர்பு கொள்ள முயன்றார். எந்த பதிலும் கிடைக்காததால், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.