கோவை, டாடாபாத் பகுதியில் உள்ள தி.மு.க அலுவலகத்தில் கோவை மாநகர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர மாவட்ட செயலாளர் நா. கார்த்திக், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், தி.மு.க சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் பொங்கலூர் பழனிச்சாமி உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மார்ச் 1-ம் தேதி முதல் தொடர்ந்து ரத்ததான முகாம், மருத்துவ முகாம், நலத்திட்டங்கள், பட்டிமன்றம், தெருமுனை பிரச்சாரம் உட்பட பல்வேறு நிகழ்வுகள் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டது. மேலும் வரக்கூடிய ஒரு வாரகாலத்திற்கு இந்தி மொழி எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் இல்லங்களின் முன்பு கோலமிடுதல், துண்டுப்பிரசுர விநியோகங்கள் போன்ற முன்னெடுப்புகளும் நடத்தப்பட உள்ளதாக முடிவெடுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, வருகின்ற 25-ம் தேதி தி.மு.க மாணவர் அணி உட்பட பல்வேறு இயக்கங்களின் மாணவர் அணியினர் இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.