கோவை துடியலூர் பகுதியில், மேற்கு வங்காள மாநிலத்திலிருந்து முறைகேடாக கொண்டு வரப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தேயிலைக் கழிவுகள் இன்று குன்னூர் மண்டல தேயிலை வாரிய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குன்னூர் மண்டல தேயிலை வாரியத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கோவை துடியலூர் அருகே நடைபெற்ற சோதனையில், சந்தேகத்திற்கிடமான ஒரு லாரியில் 13600 கிலோ எடையுள்ள தேயிலைக் கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட தேயிலைக் கழிவுகள் மற்றும் லாரியில் இருந்த ஆவணங்களின் அடிப்படையில், தேயிலை வாரிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, உரிமையாளரின் வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டன.
தேயிலைகளை வாங்கியவரிடம், அதன் முழு விவரங்கள் மற்றும் உரிய ஆதாரங்களை தேயிலை வாரியத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், கடந்த காலங்களில் கொள்முதல் செய்த அனைத்து தேயிலை மற்றும் தேயிலை கழிவுகள் தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின், அவற்றின் நம்பகத்தன்மையை ஆராய்ந்து, தற்போதைய தேயிலை வாரிய சட்டதிட்டங்களின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாரியின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநரை எச்சரித்த தேயிலை வாரிய அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.